ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் மனைவிக்கு பிரசவம் பார்த்த வாலிபர்
பெங்களூரு புறநகர் நெலமங்களா தாலுகா நாராயணபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவருடைய மனைவி ஷாலினி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
பெங்களூரு,
ஷாலினிக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஆனந்த், ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என தெரிகிறது. ஆனால், ஷாலினி வலியால் கதறி துடித்துக் கொண்டிருந்தார்.
இதனால், மனைவிக்கு பிரசவம் பார்க்க ஆனந்த் முடிவு செய்தார். அதன்படி ஆனந்த் தனது வீட்டில் வைத்து மனைவி ஷாலினிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே ஆம்புலன்ஸ் தாமதமாக அங்கு வந்தது.
இதையடுத்து குழந்தையையும், ஷாலினியும் ஆம்புலன்சில் நெலமங்களா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவ வலியால் துடித்த மனைவிக்கு கணவரே பிரசவம் பார்த்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story