மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சித்தராமையா அறிவுரை


மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சித்தராமையா அறிவுரை
x
தினத்தந்தி 21 Sep 2018 11:07 PM GMT (Updated: 21 Sep 2018 11:07 PM GMT)

பெலகாவி காங்கிரஸ் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சித்தராமையா அறிவுறுத்தினார்.

பெங்களூரு,

மருத்துவ கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் ராமநகர் மற்றும் பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருக்கிறார். பெலகாவியில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, சதீஸ் ஜார்கிகோளி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் லட்சுமி ஹெப்பால்கருக்கு ஆதரவாக மந்திரி டி.கே.சிவக்குமார் செயல்படுகிறார்.

இதனால் ஜார்கிகோளி சகோதரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விஷயத்தில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடக்கூடாது என்று கூறி கட்சிக்கு எதிராக ஜார்கிகோளி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர்.

கட்சியில் எழுந்துள்ள குழப்பத்தை தீர்க்கும்படியும், இனிமேல் கட்சியில் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொள்ளும்படியும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மந்திரி டி.கே.சிவக்குமார், தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

வீட்டுக்கு செல்வதற்கு முன்பு அவர் நேராக சித்தராமையாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு சித்தராமையாவுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது சித்தராமையா, பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும், தாங்கள் முதல்-மந்திரி ஆவதாக சொல்கிறீர்கள், அப்படி இருக்கையில் ஒரு மாவட்ட அரசியலில் தலையிட்டு சிக்கல் ஏற்படுத்துவது சரியல்ல என்றும் கூறினார். இதை டி.கே.சிவக்குமார் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

Next Story