காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்த முடியாது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்


காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்த முடியாது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்
x

காவலர் பணிக்கான வயது வரம்பை தளர்த்துவது என்பது இயலாதது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

வார இறுதி நாட்களில் புதுவையில் இருக்கும்போது கவர்னர் கிரண்பெடி வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது தூய்மைப்பணியில் கிரண்பெடி ஆர்வம் காட்டினார். அதிகாரிகளுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று தூய்மைப்பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களை பாராட்டினார்.

இந்தநிலையில் நேற்று நகரப்பகுதியில் கிரண்பெடி தூய்மைப்பணிகளை மேற்கொண்டார்.

புதுவை சின்ன மணிக்கூண்டு அருகே உள்ள பெரியமார்க்கெட், சின்ன மார்க்கெட், செஞ்சி சாலை மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். காய்கறிகள், மீன் விற்கும் பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கடைகளிலும் வியாபாரம் நடத்தப்படும் இடங்களிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கடைக்காரர்களை வலியுறுத்தினார்.

ஆய்வு முடிந்ததும் நிருபர்களிடம் கவர்னர் கிரண்பெடி கூறியதாவது:–

புதுவை மாநிலம் தூய்மையாக இருப்பதற்கு மக்களின் ஆதரவு தான் முக்கிய காரணம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நானும் புதுச்சேரி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாபாரிகள் அனைவரும் கடைகளின் அருகிலேயே குப்பை தொட்டிகளை வைத்திருக்கவேண்டும். மீதமுள்ள பொருட்களை வீதிகளில் வீசி எறியக்கூடாது. துப்புரவு பணியாளர்கள் வரும்போது அவர்களுக்கு தூய்மைப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் சொசைட்டியின் கீழ் இயங்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம், காவலர் பணிக்கான வயது வரம்பு தளர்வு அளிக்காதது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்து கவர்னர் கிரண்பெடி கூறியதாவது:–

அரசு மற்றும் சொசைட்டியின் கீழ் இயங்கும் கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களுக்கு சம்பளம் வழங்க கால தாமதம் ஆனதற்கு கவர்னர் மாளிகை பொறுப்பல்ல. அரசின் நிதி செலவிடப்படும்போது அதற்கான பணிகள் நடைபெற்று இருக்கவேண்டும். தேவையின்றி அரசின் நிதி செலவிடப்படக்கூடாது என்பதில் தான் கவனம் செலுத்தப்படுகிறது.

காவலர் பணிக்கான வயதுவரம்பினை தளர்த்துவது என்பது இயலாதது. அதற்கான அதிகாரம் எனக்கு கிடையாது.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.


Next Story