நாளை ஆனந்த சதுர்த்தி விழா : பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்


நாளை ஆனந்த சதுர்த்தி விழா : பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார்
x
தினத்தந்தி 22 Sep 2018 12:20 AM GMT (Updated: 22 Sep 2018 12:20 AM GMT)

ஆனந்த சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள். 53 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் கடந்த 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி சர்வஜனிக் மண்டல்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. 1½ நாள், 3 நாள், 5 நாள், 7 நாள் வழிபாட்டுக்கு பின்னர் ஏராளமான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியின் சிகர நிகழ்ச்சியான ஆனந்த சதுர்த்தி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடல், குளங்கள் மற்றும் செயற்கை குளங்கள் என 162 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆனந்த சதுர்த்தியையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் மொத்தம் 50 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

தாதர், கிர்காவ், வெர்சோவா, ஜூகு கடற்கரை உள்பட சிலைகள் கரைக்கப்படும் அனைத்து இடங்களிலும் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நிகழ்வுகள் கண்காணிக்கப்பட உள்ளது.

ஆனந்த சதுர்த்தி ஊர்வலத்துக்காக 53 சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. 56 சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளன. 99 சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story