பள்ளிகளில் 9 முதல் பிளஸ்-2 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பள்ளிகளில் 9 முதல் பிளஸ்-2 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 22 Sept 2018 1:23 PM IST (Updated: 22 Sept 2018 1:23 PM IST)
t-max-icont-min-icon

9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திருச்செந்தூர், 

9 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்வேறு விருதுகளை...

இந்திய நாடே வியக்கின்ற வகையில், தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு, பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றது. இதற்காக இந்திய அரசின் பல்வேறு விருதுகளையும் தமிழக அரசு வென்றுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில், தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நாளை (அதாவது இன்று) கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட உள்ளது.

கணினி மயமாக்க...

அதேபோன்று 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்படும். அங்கு இணையதள வசதி செய்து தரப்படும். அனைத்து பணிகளும் விரைவில் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதன் வாயிலாக, அது இந்தியாவுக்கே திருப்புமுனையாக அமையும்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை என்ற நிலை இனிமேல் இருக்காது. இதற்காக அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களில், பெற்றோர்- ஆசிரியர் சங்கம் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பதற்கு கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அவருடன் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் தொகுதி செயலாளர் வடமலை பாண்டியன், காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story