வாசுதேவநல்லூரில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு


வாசுதேவநல்லூரில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு
x
தினத்தந்தி 23 Sept 2018 4:00 AM IST (Updated: 22 Sept 2018 5:55 PM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரில் டெங்கு தடுப்பு பணிகளை, கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.

வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூரில் டெங்கு தடுப்பு பணிகளை, கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.

டெங்கு தடுப்பு முகாம் 

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து பகுதியில் உள்ள 18 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளுக்கு காய்ச்சல் காரணமாக டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து டெங்கு பரவாமல் இருப்பதற்கு மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் பேரில் நெல்லை மண்டல நகரப்பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஜோதிமுருகன், சங்கரன்கோவில் மண்டல சுகாதார பணிகளின் துணை இயக்குனர் நளினி, வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவர் சாந்தி சரவணா பாய், வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் லெனின் ஆகியோர் முன்னிலையில் ஒட்டு மொத்த டெங்கு தடுப்பு பிரிவு பணி முகாம் நடந்தது.

கலெக்டர் ஆய்வு 

இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று வாசுதேவநல்லூர் வந்தார். அங்கு நடைபெறும் டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2, 5, 11, 12, 13 ஆகிய வார்டுகளுக்கு சென்று வாறுகால் மற்றும் குடிநீர் வசதியை பார்வையிட்டார். அப்போது, இங்கு வாறுகாலில் சரியாக குப்பைகளை அள்ளுவதில்லை என பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் சுகாதார பணிகளை சிறப்பாக செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுச் சென்றார். மேலும் குளோரின் கலக்கப்படாத குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து, அங்குள்ள ஒரு வீட்டில் குடிநீரை வாங்கி ஆய்வு செய்தார். கலெக்டரின் ஆய்வை தொடர்ந்து சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Next Story