ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவிடம் ‘‘தூத்துக்குடி மக்கள் திரண்டு வந்து மனு கொடுக்க வேண்டும்’’ வைகோ வலியுறுத்தல்


ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவிடம் ‘‘தூத்துக்குடி மக்கள் திரண்டு வந்து மனு கொடுக்க வேண்டும்’’ வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Sep 2018 9:30 PM GMT (Updated: 2018-09-22T20:17:41+05:30)

‘‘ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவிடம் தூத்துக்குடி மக்கள் திரண்டு வந்து மனு கொடுக்க வேண்டும்’’ என்று வைகோ வலியுறுத்தினார்.

தூத்துக்குடி, 

‘‘ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவிடம் தூத்துக்குடி மக்கள் திரண்டு வந்து மனு கொடுக்க வேண்டும்’’ என்று வைகோ வலியுறுத்தினார்.

வைகோ 

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் நேற்று தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை உப்பாற்று ஓடை பகுதியில் கொட்டப்பட்டு உள்ள தாமிர தாது கழிவுகளை பார்வையிட்டனர். அப்போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அங்கு வந்து, ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகள் குறித்து அந்த குழுவினரிடம் எடுத்துக் கூறினார்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆலையை மூட கோரிக்கை 

தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று 22 ஆண்டுகளாக இங்குள்ள மக்களும், பொதுநல அமைப்புகளும், நாங்களும் அமைதி வழியிலே போராடி வந்து இருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தலைவர் கோயல் அறிக்கையின்படி, அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடிக்கு ஆய்வு செய்ய வந்து உள்ளனர். அவர்களிடம் தாமிர தாது கழிவுகள் 20 அடி ஆழத்துக்கு கொட்டப்பட்டு உள்ளது. இங்கு மட்டும் அல்ல, பல இடங்களில் கொட்டப்பட்டு அதன் மேல் சரள் மணலை கொட்டி மறைத்து உள்ளனர். இந்த கழிவுகளை மொத்தமாக அகற்ற வேண்டும், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு ஆய்வுக்குழு தலைவர், அதனை நான் முடிவு செய்ய முடியாது என்றார்.

அப்போது, இந்த கழிவுகளால் எந்த பாதிப்பும் கிடையாது. இந்த கழிவுகளை தனியார் ஒருவருக்கு கொடுத்து உள்ளோம். எங்களுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஸ்டெர்லைட் ஆலைக்காக வாதாடுகிற வக்கீல் ஒருவர் பேசினார். அதனை இங்கு பேச வேண்டாம். நீதிமன்றத்தில் பேசி கொள்ளுங்கள். இங்கு உள்ள நிலைமையை தான் பார்க்க வந்து உள்ளோம் என்று ஆய்வுக்குழு தலைவர் கூறினார். அப்போது நான், ஸ்டெர்லைட் ஆலையும், தனியாரும் ஒன்று சேர்ந்து கொண்டீர்கள் என்று சொன்ன உடன், நீங்கள் குறுக்கே பேசக்கூடாது என்று கூறி விட்டார். அதே நேரத்தில் மிகவும் தவறான செய்திகளை சொல்லும்போது, கொஞ்சம் வாக்குவாதம் வந்தது. ஆய்வுக்குழு தலைவர் இங்கு வாக்குவாதம் வேண்டாம் என்று கூறினார்.

கருத்து கேட்பு கூட்டம் 

நாளை (அதாவது இன்று) காலை 11 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று ஆய்வுக்குழுவினர் அறிவித்து உள்ளனர். ஆலைக்குள் காலை 8 மணிக்கு சென்று ஆய்வு செய்ய போகிறார்கள். நான் ஆலைக்குள் போக மாட்டேன். இந்த நச்சை அகற்ற ஆலையை மூட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இந்த நச்சை எங்கு கொண்டு போடுவார்கள்? எங்கு போட்டாலும் கேடுதானே. தாமிர அடர்த்தியின் கசடு தான் இந்த நச்சு. இதனை எங்கு வைத்தாலும் கேடு. இது நோய்களை ஏற்படுத்தும். ஆகையால் இந்த ஆலையை மூட வேண்டும் என்பது தான் எங்கள் பதில். ஒரு தீர்ப்பு வரும் முன்பு கருத்து சொல்லக்கூடாது. நீதிபதி நியாயமாக செய்வார் என்ற நம்பிக்கையில் இங்கு வந்து இருக்கிறோம்.

அமைதியாக வர வேண்டும் 

நாளை (இன்று) நடைபெறும் கருத்துகேட்பு கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மீளவிட்டான், திரேஸ்புரம், அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் உள்பட தூத்துக்குடியில் உள்ள எல்லா பகுதி மக்களும் அமைதியாக திரண்டு வந்து, எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்கள் கோடி கோடியாக கொள்ளை அடித்து செல்வதற்கு நாங்கள் சாவதா என்ற மக்கள் கொந்தளிப்பு இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

ஏனென்றால், வெளிமாவட்டங்களில் இருந்து குண்டர்களை லாரி லாரியாக ஏற்றி வந்து கலவரம் செய்தனர் என்று கோர்ட்டில் ஸ்டெர்லைட் வக்கீல் கூறி உள்ளார். போராட்டத்துக்கு திரண்டு வந்த மக்கள் அவர்களாக தான் வந்தனர். அன்று சுட்டு கொல்லப்பட்ட நேரத்தில் ஏழை பெண்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தான் வந்தனர். அதுபோல கருத்து கேட்பு கூட்டத்துக்கும் மக்கள் அமைதியாக வர வேண்டும். நாம் இதுவரை வன்முறையில் இல்லை என்பதை காட்டி வந்து உள்ளோம். கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள கூடிய மக்களை, அவர்களை வழி நடத்தக்கூடிய தலைவர்கள் அமைதியான முறையில் கூட்டி வர வேண்டும். அனைவருக்கும் மனு கொடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு வைகோ கூறினார்.

Next Story