புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 Sept 2018 4:00 AM IST (Updated: 22 Sept 2018 8:29 PM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜையும், காலை 9 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும், தீபாராதனையும், 10 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. பெருமாளை தரிசனம் செய்வதற்காக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர்.

இதே போல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், தோவாளை கிருஷ்ணசுவாமி கோவில், கோட்டார் வாகையடி ஏழகரம் பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன.

அவற்றிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.

Next Story