தாளவாடி அருகே அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மலை கிராம மக்கள்
தாளவாடி அருகே அடிப்படை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.
தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி பஞ்சாயத்துக்கு உள்பட்டது பீம்ராஜ்நகர் மலை கிராமம். இங்கு சுமார் 70–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கூலித்தொழிலாளர்கள். எந்தவித அடிப்படை வசதியும் இன்றி வாழ்க்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். காலை, மாலை என 2 முறை மட்டுமே பஸ்கள் வந்து செல்கின்றன. மற்ற நேரங்களில் பீம்ராஜ் நகரை சேர்ந்தவர்கள் தாளவாடிக்கு செல்ல வேண்டுமென்றால் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சூசைபுரம் கிராமத்திக்கு சென்று, பின்னர் அங்கிருந்து பஸ் ஏறிச்செல்லவேண்டும்.
பீம்ராஜ் நகர் மக்கள் இதுபற்றி கூறும்போது, ‘ஊர் முழுவதும் செடி, கொடிகள் முளைத்து பாதையில் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் உள்ளது. சில வீடுகளில் இன்னும் மின்சார இணைப்பு இல்லை. ஊராட்சி சார்பில் எங்களுக்கு கழிப்பிடம் கட்ட ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ.12 ஆயிரம் நிதி ஒதுக்கினார்கள். ஆனால் கடமைக்கு சிமெண்டு கற்கள் வைத்து, சிமெண்ட் கூட பூசாமல் கட்டிக்கொடுத்துள்ளார்கள்.
சில இடங்களில் கழிவறை கட்ட தொட்டிக்கு குழி மட்டும் வெட்டப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் குழாய்கள் பதிக்கவில்லை. இதனால் எங்களால் பயன்படுத்த முடியவில்லை. இனியாவது எங்கள் கிராமத்தை அரசு அதிகாரிகள் கண்டுகொண்டு பஸ்வசதி, சாலை, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்கள்.