தாம்பரம்-வேளச்சேரி சாலை விரிவாக்கப்பணிகள் தாமதத்தால் போக்குவரத்து நெரிசல்


தாம்பரம்-வேளச்சேரி சாலை விரிவாக்கப்பணிகள் தாமதத்தால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 22 Sep 2018 11:00 PM GMT (Updated: 22 Sep 2018 6:46 PM GMT)

தாம்பரம்-வேளச்சேரி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறாமல் தாமதம் ஆவதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தினமும் விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் ஜி.எஸ்.டி. சாலைக்கு நிகரானது, தாம்பரம்-வேளச்சேரி சாலை. கிழக்கு தாம்பரத்தில் இருந்து இந்த சாலை வழியாக அகரம், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை, மடிப்பாக்கம், பரங்கிமலை உள்பட சென்னையின் பல இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களும் இந்த சாலை வழியாகத்தான் செல்கிறது.

சேலையூர், கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஏராளமான தனியார் பள்ளி வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்திதான் சென்று வருகின்றன.

சென்னை புறநகர் பகுதி பெரும் வளர்ச்்சி பெற்றுவரும் நிலையில், இந்த சாலை வழியைத்தான் புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் பயன்படுத்துவதால் இந்த சாலையில் வாகனபோக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கிழக்கு தாம்பரம் ரெயில்வே மேம்பாலம் முதல் ஐ.ஏ.எப். சாலை சந்திப்பு வரை ஆறு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதன்பிறகு சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெறவில்லை.

அந்த பகுதிகளில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி சாலையில் தினமும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை கொடுத்தால் மட்டுமே நிலத்தை கையகப்படுத்த முடியும். ஆனால் இழப்பீட்டு தொகை வழங்கி நிலத்தை பெறவேண்டிய நெடுஞ்சாலை துறையினர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் வருவாய்த்துறையினரையும், மற்ற துறையினரையும் குறை கூறிவருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்றால் மட்டுமே சாலையின் இரு பகுதிகளிலும் மழைநீர் கால்வாய் அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. மழைநீர் கால்வாய் அமைக்காததால் அரைமணிநேரம் மழை பெய்தாலே வேளச்சேரி சாலை வெள்ளக்காடாக மாறி, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கிழக்கு தாம்பரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற இந்த சாலையில் உள்ள பட்டா நிலங்களுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் உரிய இழப்பீடு கொடுத்து நிலத்தை பெற்று சாலை அமைத்தால் மட்டுமே முழுமைபெறும்.

இதனால் சேலையூர் போலீஸ் நிலையம், கிறிஸ்துராஜா பெண்கள் பள்ளி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் பாதியில் நிற்கிறது.

சேலையூர் பகுதியில் வருவாய்த்துறையினர் நிலம் அளந்து கொடுக்காததால் பணிகள் தாமதம் ஆவதாக நெடுஞ்சாலைத்துறையினர் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக வருவாய்த்துறையினரிடம் கேட்டபோது, “சேலையூர் பகுதியில் நிலஅளவை செய்து தரும்படி கடந்த வாரம்தான் நெடுஞ்சாலைத்துறையினர் மனு அளித்து உள்ளனர். அடுத்த வாரத்தில் தாம்பரம்-வேளச்சேரி சாலை பகுதியில் நிலஅளவை பணிகள் நடைபெறும்” என்றனர்.

போக்குவரத்து நெரிசல், தினமும் விபத்துகள் ஏற்படுவதுடன், பாதாள சாக்கடை பணிகள் பாதிப்பு, சாலையின் இரு பகுதியிலும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் பாதிப்பு என வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளதால் தாம்பரம்-வேளச்சேரி சாலை விரிவாக்கப் பணிகளை விரைவாக செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story