‘பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்’ பொதுமக்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பேராவூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேராவூர் ஊராட்சியில் வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கலந்துகொண்டு பேசியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 614 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 57 ஆயிரத்து 369 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11 லட்சத்து 14 ஆயிரத்து 48 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வாசித்து காண்பித்திட ஏதுவாக மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திப்படுகிறது. இதேபோல வருகிற 6–ந்தேதி மற்றும் 13–ந்தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வாக்காளர்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருத்தல், புதிய இளம் வாக்காளர்களை சேர்த்தல், பெயர் திருத்தம், நீக்கம், இடமாற்றம் ஆகியவை மேற்கொள்ள ஏதுவாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. குப்பையாக தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் தண்ணீர் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு காய்ச்சல் பரவும் சூழ்நிலை உருவாகிறது. எனவே பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மத்திய அரசு “தூய்மையே சேவை“ என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.