சாப்டூர் வனப்பகுதியில் புலிகளை கண்காணிக்க 60 இடங்களில் கேமராக்கள் அதிகாரி தகவல்
சாப்டூர் வனப்பகுதியில் புலிகளை கண்காணிக்க 60 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேரையூர்,
பேரையூர் அருகே சாப்டூர் வனப்பகுதி 25 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த வனபகுதிக்குள் மான்கள், கரடிகள், காட்டுமாடுகள், செந்நாய்கள் ஏராளமாக உள்ளன. சிறுத்தைகள், புலிகள், 20–க்கும் மேற்பட்ட யானைகள் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. விலங்குகளுக்கு உணவு சங்கிலி தொடர்பு வனபகுதிக்குள் உள்ளதால் அதிகமான விலங்குகள் இங்கு வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதியை மத்திய அரசு புலிகள் காப்பகமாக அறிவிக்க உள்ளதால் புலிகளின் தனிப்பட்ட நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு வனப்பதிக்குள் 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் புலிகளின் தனிப்பட்ட நடமாட்டம் குறித்த தகவல்களும், வனபகுதிக்குள் உள்ள விலங்குகள் நடமாட்டத்தையும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாட்டத்தையும் வனபகுதிக்குள் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் அரிய முடியும். தாணிப்பாறை முதல் மல்லப்புரம் வரையில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதுகுறித்து வனச்சரக அதிகாரி பொன்னுசாமி கூறியதாவது:– இந்த வனப்பகுதியில் தனிப்பட்ட புலிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.காப்பகமாக அறிவிப்பதற்கு முன்ஏற்பாடாக இப்பணி இருக்கும். விரைவில் இப்பணி தொடங்க உள்ளது என்று கூறினார்.