எச்.ராஜா, கருணாஸ் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி


எச்.ராஜா, கருணாஸ் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2018 11:30 PM GMT (Updated: 22 Sep 2018 7:10 PM GMT)

“எச்.ராஜா, கருணாஸ் எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்“ என்று மதுரையில் நேற்று இரவில் அளித்த பேட்டியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

“எச்.ராஜா, கருணாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்?“ என்று நிருபர்கள் கேட்டதற்கு, “பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். சிலருக்கு அது தெரிவதில்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எனவே, இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்“ என்றார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலின் தமிழக அரசு மீது நாளொரு ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு, தி.மு.க. அரசுதான். இது உலகறிந்தது. பெட்ரோல்–டீசல் மீதான வரி விதிப்பு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருந்தாலும் அவற்றின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஜெயலலிதா வழியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி, அவரது சாதனைகளை மக்களுக்கு சொல்லி வருகிறோம்.

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story