மேலூர் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் சாலைமறியல்


மேலூர் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 22 Sep 2018 11:00 PM GMT (Updated: 2018-09-23T00:40:17+05:30)

ஒருபோக பாசன பகுதியின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலூர்,

மேலூர் பகுதி பெரியாறு– வைகை ஒரு போக பாசனத்தின் கடை மடை பகுதியாகும். இங்கு கடந்த 4 ஆண்டுகளாக பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு பெரியாறு அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. இதையடுத்து மேலூர் ஒருபோக பாசனத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டாவது முழுமையாக மகசூல் பெறலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நாற்றங்கால் பணியை தொடங்கினர்.

தண்ணீர் திறந்து ஒரு மாதம் ஆகியும் வெள்ளலூர் நாடு பகுதிக்கு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கவில்லை. அதேநேரத்தில் வெள்ளலூர் நாடு பகுதி வழியே சிவகங்கை மாவட்டத்துக்கு முழு அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வெள்ளலூரை மையமாக வைத்து சுற்றி உள்ள உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, கூலிபட்டி, அம்பலகாரன்பட்டி, ஒக்கபட்டி, வல்லவன்காலனி, அ.புதுப்பட்டி, கோட்டனத்தான்பட்டி, நயித்தான்பட்டி, ஒத்தப்பட்டி, வண்ணாம்பாறைப்பட்டி, இடையவலசை, வெள்ளலூர் உள்ளிட்ட 60–க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு விவசாயத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை.

ஒருபோக பாசனத்திற்கென தமிழக அரசால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 1 மாதம் ஆகியுள்ள நிலையில் கலெக்டர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

கடந்த 4 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த ஆண்டும் பாதிப்புக்குஉள்ளாகிவிடுவோம் என்ற அச்சத்தில் மேலூர்– சிவகங்கை சாலையில் வெள்ளலூர் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். அரசியல் தலையீடு காரணமாக முறையாக கடைமடை வரை தண்ணீர் வழங்கவில்லை. நாற்றங்காலில் விதைநெல் விதைத்து வளர்ந்துள்ள நெல் நாற்றுகளுக்கு தண்ணீர்

இல்லாமல் குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று காப்பாற்றுகிறோம். கண்மாய்களிலும் தண்ணீர் இல்லை. அகதிகளாக வெளி இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலையில் இருப்பதாக விவசாயிகள்கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம், பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.


Next Story