குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி மற்றொருவரின் கதி என்ன?


குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி மற்றொருவரின் கதி என்ன?
x
தினத்தந்தி 23 Sept 2018 4:15 AM IST (Updated: 23 Sept 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு மாணவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லெப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சையது அலி. இவரது மகன் முகமது ரசின் (வயது 18). இவர் சென்னை தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் அபுல் ஹசன் (18) திருச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்கள் 2 பேர் மற்றும் அவர்களது நண்பர்களான அக்தர் பர்வேஷ் (18), காதர் (18), இம்ரான் (18), இலியாஸ் மகன் அசரப் (18), உமர் (18) அமீர் பாசில் (18) உள்பட 9 பேர் வேப்பூர் அருகே கோவிந்த ராஜபட்டினம் கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் குவாரி குட்டை தண்ணீரில் குளிக்க சென்றனர். இவர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது.

இந்த நிலையில் குட்டையில் இறங்கி சுற்றுச்சுவரை பிடித்து கொண்டு அனைவரும் குளித்தனர். இதில் முகமது ரசின், அபுல் ஹசன் ஆகிய 2 பேரும் சுற்றுச்சுவரை பிடித்து குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர். இதைப்பார்த்து பதறிப்போன நண்பர்கள் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதையடுத்து அவர்கள் வந்து தண்ணீரில் குதித்து தேடி பார்த்தனர். ஆனால் 2 மாணவர்களும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே குன்னம் போலீசாருக்கும், வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரில் மூழ்கிய முகமது ரசின், அபுல் ஹசன் ஆகிய 2 பேரையும் ரப்பர் படகுகளில் தேடினர். இதில் அபுல் ஹசன் உடலை மட்டும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதைபார்த்த சக நண்பர்கள் கதறி அழுதனர்.

பின்னர் அபுல் ஹசன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் முகமது ரசினை தேடி வருகின்றனர். அவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story