ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை போலீசார் வலைவீச்சு


ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Sept 2018 4:30 AM IST (Updated: 23 Sept 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள திருவாசி குடித்தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 65). இவர் மண்ணச்சநல்லூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு சேட்டு, அவரது மனைவி பிரேமா (57), மாமியார் வெள்ளையம்மாள் (80) ஆகியோர் வீட்டின் பின்பக்க கதவு மற்றும் முன்பக்க கதவை உள்பக்கமாக தாழ்பாளிட்டு தூங்கிக்கொண்டிருந்தனர்.

சேட்டு தனது வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் பால் கறப்பதற்காக பால்காரர் வந்தார். அவர் வழக்கம்போல் ஜன்னல் வழியாக சேட்டை அழைத்துள்ளார். அப்போது எழுந்த சேட் பின்பக்க கதவை திறப்பதற்காக வந்தபோது, கதவின் தாழ்ப்பாள் திறந்தே கிடந்தது. தூக்கத்தில் எழுந்து வந்த அவர், அதை கவனிக்காமல் பால்காரர் உள்ளே வந்து பால் கறந்ததும் பாலை வாங்கி கொண்டு, அதை பூஜை அறையில் வைப்பதற்காக சென்றார்.

அப்போது அங்கிருந்த பீரோ திறந்து இருந்தது. அதில் இருந்த துணிகள் கீழே சரிந்து கிடந்தன. இதை கவனித்த அவர் தனது மனைவி பிரேமாவை எழுப்பி பீரோ திறந்து கிடந்தது பற்றி கேட்டார். அவர் தான் பீரோவை திறக்க வில்லை என்று கூறினார். பீரோவில் இருந்த லாக்கரை பார்த்தபோது, அதில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை கண்டு சேட் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சேட்டு, அருகில் இருந்த தனது உறவினரான ம.தி.மு.க. திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சேரனிடம் (40) கூறினார். இதனையடுத்து வாத்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர்.

நள்ளிரவில் சேட்டுவின் மாமியார் வெள்ளையம்மாள் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்து பதுங்கிகொண்டனர். இதனை யடுத்து வீட்டிற்குள் வந்த வெள்ளையம்மாள் வீட்டின் கதவை தாழிட்டு மீண்டும் படுத்து தூங்கிவிட்டார்.

வீட்டில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பூஜை அறைக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கு மாடத்தில் இருந்த சாவி கொத்தை எடுத்துள்ளனர். அப்படியே பயன்படுத்தினால் சத்தம் கேட்டுவிடும் என எண்ணிய மர்ம நபர்கள் பீரோ சாவியை மட்டும் சாவிகொத்தில் இருந்து கழற்றி அதன் மூலம் பீரோவை திறந்து லாக்கரில் இருந்த தங்கசங்கிலிகள், வளையல்கள், மோதிரம், தோடு உள்பட 60 பவுன் நகைகள் மற்றும் குத்துவிளக்கு, டம்ளர், தட்டு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

தொடர்ந்து மர்ம நபர்கள் நிதானமாக, வேறு எங்காவது நகை-பணம் இருக்கிறதா? என்று தேடி பார்த்துள்ளனர். அங்கு டிபன் பாக்சில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்தனர். இதனையடுத்து பின்பக்க கதவின் தாழ்ப்பாளை திறந்து வெளியே வந்த அவர்கள் அங்கிருந்த சேட்டுக்கு சொந்தமான மற்ற 3 வீடுகளில் ஒரு வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அதில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாததால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story