தொடர் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 23 Sept 2018 5:00 AM IST (Updated: 23 Sept 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நகரில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டும்.

இந்தநிலையில் முகரம் பண்டிகை, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.

குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். ஒரே நேரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், மோயர்பாயிண்ட், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது, மேககூட்டங்கள் தரையிறங்கியவாறு சென்றன. மேலும் சாரல் மழையும் பெய்தது.

படகு சவாரி, குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்ததால் நகரில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story