சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்ய வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்ய வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:00 AM IST (Updated: 23 Sept 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

கரூர் பகுதியில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கரூர்,

கரூர் காமராஜபுரம் வடக்கு மெயின்ரோடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சாலையின் நடுவே அடுத்தடுத்து 2 பள்ளங்கள் ஏற்பட்டது. அந்த பள்ளங்களின் கீழ்புறத்தில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கழிவுநீர் வெளியேறி கொண்டிருக்கிறது.

இதனால் சிறுவர், சிறுமி உள்ளிட்டோர் தவறுதலாக அதனுள் விழுந்து விடக்கூடாது என்பதற்காகவும், மேலும் அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவும் அந்த பள்ளங்களை சுற்றி இரும்பு தடுப்பு (பேரிகார்டு), கம்புகளை கட்டி தற்காலிகமாக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

எனினும் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள டெக்ஸ்டைல் ஜவுளி நிறுவனம், கொசுவலை நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு மூலப்பொருட்களை ஏற்றி வரும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் காமராஜபுரம் வடக்கு மெயின் சாலையில் பள்ளங்கள் இருப்பதை அறியாமல் வந்து விடுகின்றனர். பின்னர் பள்ளத்தை கண்டதும் லாரிகளை பின்னால் எடுத்து செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் அங்கு ஏற்படுகிறது.

எனினும் சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் அந்த பள்ளங்களின் ஓரமாக ஆபத்தினை உணராமல் போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக அந்த சாலையில் மேலும் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைய வாய்ப்பு இருக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக இந்த சாலையை பார்வையிட்டு பள்ளங்களை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், கரூர் சர்ச்கார்னர்- ஐந்துரோடுக்கு இடைபட்ட பகுதியில் முன்பு ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்யும் பணிகளை விரைந்து முடித்து அந்த சாலையை போக்குவரத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Next Story