திருநின்றவூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை


திருநின்றவூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 22 Sep 2018 10:05 PM GMT (Updated: 22 Sep 2018 10:05 PM GMT)

திருநின்றவூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் எம்.ஜி.ஆர்.நகர் கெங்கு ரெட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27) பெயிண்டர். இவரது மனைவி தாரணி (23). இவர்களது சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியை அடுத்த நரசமங்கலம். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 1-3-2014 அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அருண்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த தாரணி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 9 மணிக்கு அருண்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாரணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.

Next Story