பொள்ளாச்சியில் குடிநீர் குழாய் உடைப்பு: பொக்லைனை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்


பொள்ளாச்சியில் குடிநீர் குழாய் உடைப்பு: பொக்லைனை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2018 3:30 AM IST (Updated: 23 Sept 2018 7:45 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் குடிநீர் குழாய் உடைப்பு எதிரொலியாக பொக்லைனை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சி 34–வது வார்டுக்கு உட்பட்ட பி.கே.எஸ்.காலனியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 5 நாட்களுக்கு ஒரு முறை 2 மணிநேரம் குடிநீர்வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த குறுகியநேரம் அளவில் போதிய குடிநீர் கிடைக்காமல் பி.கே.எஸ்.காலனி பொதுமக்கள் கடும்அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக 5 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கி தவித்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு நகராட்சி அதிகாரியை சந்தித்து முறையிட திட்ட மிட்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பி.கே.எஸ்.காலனி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பொக்லைன்மூலம் குழி தோண்டும்போது எதிர்பாராதவித விதமாக சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்தது.

அதனை சரி செய்யாத நிலையில் குடிநீர்வினியோகம் மேலும் மோசம் அடையும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் நேற்று காலையும் குழி தோண்டுவதற்காக பொக்லைன் எந்திரம் வந்தது. இதனால் ஆவேசம் அடைந்த பி.கே.எஸ்.காலனி பொதுமக்கள் பலர் ஒன்று திரண்டு பொக்லைன் எந்திரத்தை காலை 8.30 மணிஅளவில் சிறைப்பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதையடுத்து, பொதுமக்கள் குழிதோண்டும் பணியினை அதிகாரிகள் முன்னிலையில்தான் சேதம் இல்லாமல் தோண்டவேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் சிறைப்பிடிப்பு போராட்டத்தை விலக்கி பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொக்லைன் சிறைப்பிடிப்பு சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story