ஈரோடு சாயப்பட்டறையில் வி‌ஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு


ஈரோடு சாயப்பட்டறையில் வி‌ஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 24 Sept 2018 5:15 AM IST (Updated: 23 Sept 2018 10:00 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சாயப்பட்டறையில் வி‌ஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஈரோடு பெரியசேமூர் சி.எஸ். நகர் பகுதியில் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இங்கு ரசாயன கழிவு நீரை சேமித்து சுத்தம் செய்ய 15 அடி ஆழத்தில் பெரிய தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்டறையில் ஜார்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டம் கரிஜோரி அருகே உள்ள மார்கோமுன்டா பகுதியை சேர்ந்த மனீர் அன்சாரி (வயது 56) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மரவாடி பண்டிட்(38) ஆகியோர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ஈரோடு சின்ன சேமூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று காலை 10 மணி அளவில் மனீர் அன்சாரியும், மரவாடி பண்டிட்டும் பட்டறைக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தங்களது ஆடைகளை கழட்டி வைத்துவிட்டு தொட்டிக்குள் இறங்கி உள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் தொட்டிக்குள் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பட்டறை காவலாளி தொட்டிக்குள் எட்டி பார்த்துள்ளார். அப்போது மனீர் அன்சாரியும், மரவாடி பண்டிட்டும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் எந்தவித அசைவுமின்றி கிடந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து பட்டறை உரிமையாளருக்கும், ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு தொட்டிக்குள் இறங்கி, கழிவுநீரில் இறந்த நிலையில் மிதந்த மனீர் அன்சாரி, மரவாடி பண்டிட் ஆகியோரின் உடல்களை கயிறு கட்டி வெளியில் கொண்டு வந்தனர். அப்போது இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனீர் அன்சாரியும், மரவாடி பண்டிட்டும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொட்டிக்குள் இறங்கி உள்ளதால் அவர்கள் வி‌ஷ வாயு தாக்கி இறந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

அதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தொழிலாளர்கள் 2 பேர் இறந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சம்பந்தப்பட்ட சாயப்பட்டறையின் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஈரோடு–சத்தி ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசாரிடம் போராட்டக்காரர்கள் கூறும்போது, ‘இந்த பகுதியில் ஏராளமான சாய, சலவை, தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. மழை நீர் சேகரிப்பு தொட்டி என்ற பெயரில் பெரிய அளவிலான தொட்டிகளை அமைத்து கொண்டு, அதில் ஆலையின் கழிவுகளை சேகரிக்கின்றனர்.

இதனால் தொட்டிக்குள் மூழ்கி தொழிலாளர்கள் பலர் பரிதாபமாக இறந்து வருகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், 2 பேரின் இறப்பிற்கும் உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிடவேண்டும்‘. என்றார்கள்.

அதற்கு போலீசார், ‘இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்படும். எனவே நீங்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சத்தி ரோட்டில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வி‌ஷவாயு தாக்கி வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் இறந்த சம்பவம் குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story