வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு அருகே மலையப்பன்பட்டியில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடும் வறட்சி காரணமாக அந்த ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டன.
இதனால் கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீரை தேடி கிராம மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், காலிக்குடங்களுடன் வத்தலக் குண்டு-உசிலம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அது பலனளிக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story