அதிகாரிகளை கண்டித்து என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்; பாப்புலர் பிரண்ட் அமைப்பின் பொதுச்செயலாளர் பேட்டி


அதிகாரிகளை கண்டித்து என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்; பாப்புலர் பிரண்ட் அமைப்பின் பொதுச்செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 24 Sept 2018 4:30 AM IST (Updated: 24 Sept 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளை கண்டித்து என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்று பாப்புலர் பிரண்ட் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாலித்முகமது கூறினார்.

கோவை,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித்முகமது கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்றதில் இருந்து உளவுத்துறை, வருமான வரித்துறை போன்ற அனைத்து துறைகளும் இந்துத்துவ செயல்திட்டங்களை செயல்படுத்தும் துறையாக செயல்பட்டு வருகிறது. தீவிரவாத செயல்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) என்ற அமைப்பு சங்பரிவார் இயக்கங்கள் தொடர்புடைய குண்டு வெடிப்பு வழக்குகளில் இருந்து குற்றவாளிகளை விடுவிப்பதில் வேகம் காட்டி வருகிறது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு ஆகியவற்றில் தொடர்புடைய அபினவ் பாரத் என்ற சங்பரிவார் அமைப்பை சேர்ந்த பிரக்யாசிங் தாகூர், சுவாமி அசிமனந்தா உள் ளிட்ட முக்கிய குற்றவாளிகளை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. இதில் அசிமானந்தா என்பவர் நீதிபதி முன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர் ஆவார். அதே நேரம் தமிழகத்தில் சசிகுமார் படுகொலையை விசாரிக்கிறேன் என்ற பெயரில் கோவையில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைத்துள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்பும் விசாரணை என்ற பெயரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அலைக்கழித்து வருகிறார்கள். தமிழகத்தில் எத்தனையோ படுகொலைகள் நடக்க சசிகுமார் கொலை வழக்கை மட்டும் என்.ஐ.ஏ. ஏன் விசாரணைக்கு எடுக்க வேண்டும். சசிகுமார் படுகொலை நடப்பதற்கு முன்பு கோவை அப்துல் ரசாக் என்பவர் பாசிச சக்திகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க மறுப்பது ஏன்?.

இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய போனில் பேசினார்கள் என்பதற்காக 5 முஸ்லிம் இளைஞர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டும் என்ற சங்பரிவாரின் செயல்திட்டத்தை தமிழகத்தில் என்.ஐ.ஏ. செயல்படுத்தி வருகிறது.

எனவே பாரதீய ஜனதாவின் இந்துத்துவ செயல்திட்டங்களை செயல்படுத்தும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கோவையில் முஸ்லிம் சமூகத்தை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து கோவை ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் வருகிற 1–ந்தேதி நடைபெறும். பாய், தலையணைகளுடன் அங்கு சென்று போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர் அன்வர் உசேன், ஒருங்கிணைப்பாளர் நவ்பல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story