கோவையை போல் தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நூலகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
கோவையை போல் தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நூலகம் திறக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை,
கோவை நகரில் உள்ள 24 போலீஸ் நிலையங்களிலும் ‘காவல் நிலையம் தோறும் நூலகம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் நூலகம் தொடக்க விழா கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. அங்கு புதிய நூலகத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது–
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜெய லலிதா அறிவித்த திட்டங்கள், மக்களுக்கு தேவையான திட்டங்களாகும். இவை முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை புறநகர் மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத அளவு 44 போலீஸ் நிலையங்களில் நூலகம் தொடங்கப்பட்டு உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு வரும் மக்கள் தங்கள் அறிவை பெருக்கி கொள்ளவும், போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நட்புறவு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நூலகம் தொடங்கப்பட்டு உள்ளது.
தற்போது மாநகரில் 24 போலீஸ் நிலையங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திலும் நூலகம் தொடங்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் கமிஷனர்கள் லட்சுமி, சுஜித் குமார், செல்வகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
அரிமா மாவட்ட கவர்னர் மோதிலால் கட்டாரியா வரவேற்றார். விழாவில் ரூட்ஸ் நிர்வாக இயக்குனர் கவிஞர் கவிதாசன், அரிமா முதல் நிலை துணை கவர்னர் கரணபூபதி, 2–ம் நிலை துணை கவர்னர் கருணாநிதி, அரிமா சங்க நிர்வாகிகள் சுபா சுப்பிரமணியம், ராம்குமார், முருகன், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.