செல்போன் திருடியதாக சிறுவனை கட்டி வைத்து அடித்துக்கொன்ற கும்பல் 5 பேர் கைது


செல்போன் திருடியதாக சிறுவனை கட்டி வைத்து அடித்துக்கொன்ற கும்பல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2018 11:15 PM GMT (Updated: 23 Sep 2018 7:09 PM GMT)

கரூர் அருகே செல்போன் திருடியதாக கூறி 15 வயது சிறுவனை கும்பல் கட்டி வைத்து அடித்து கொலை செய்தது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த ஜெகதாபி கிராமம் அல்லாளிகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி இளஞ்சியம்(வயது 40). கூலித்தொழிலாளி. இவர்களுக்கு பாலசுப்பிரமணி(15) என்ற மகன் மற்றும் நந்தினி(10) என்ற மகள் உண்டு. பழனிச்சாமி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இளஞ்சியம் மகன் மற்றும் மகளுடன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார்.

பாலசுப்பிரமணி, நந்தினி ஆகியோர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்தனர். இதில் 8-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்ட பாலசுப்பிரமணி, பின்னர் கிடைத்த வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கையில் பணம் ஏதும் இல்லாத போது, அவர் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த இளஞ்சியம், இவ்வாறான தீய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மகனை கண்டித்தார். ஆனால் திறந்திருந்த வீடுகளில் செல்போன், பணம் உள்ளிட்டவற்றை விளையாட்டு வாக்கில் எடுத்துச் செல்வது பாலசுப்பிரமணியின் செயல்பாடாக இருந்தது. இதனால் பொருளை பறிகொடுத்தவர்கள் ஆத்திரத்தில் பாலசுப்பிரமணியை பிடித்து திட்டி கண்டித்துள்ளனர். சில சமயங்களில் அடித்து உதைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சில இளைஞர்கள் இளஞ்சியம் வீட்டிற்கு வந்து, அவரிடம் செல்போன் ஒன்று திருட்டு போய்விட்டது. அதுகுறித்து பாலசுப்பிரமணியிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு இளஞ்சியம், தனது மகன் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து வெளியிடங்களில் பாலசுப்பிரமணியை அந்த இளைஞர்கள் தேடி கண்டுபிடித்து, அவருடைய வீட்டிற்கு மாலை 6 மணியளவில் அழைத்து வந்தனர்.

அப்போது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, ரூ.3 ஆயிரம் திருடப்பட்டிருப்பதாக கூறி, அந்த பகுதியை சேர்ந்த பழனிசாமி (50) மற்றும் சிலர் அந்த இளைஞர்களுடன் சேர்ந்து பாலசுப்பிரமணியிடம் விசாரித்தனர். அப்போது அச்சிறுவனை சிலர் தாக்கினர். இதனைக்கண்ட இளஞ்சியம், நந்தினி ஆகியோர் அடிக்காதீர்கள்... அடிக்காதீர்கள்... என கதறி அழுதனர். அப்போது 2 பேரையும் அவர்கள் மிரட்டி, அங்கிருந்து போகுமாறு கூறி அனுப்பி விட்டனர்.

பின்னர் வீட்டின் திண்ணையில் உள்ள இரும்பு தூணில் பாலசுப்பிரமணியை கட்டி வைத்து உருட்டுக்கட்டை, குச்சி உள்ளிட்டவற்றால் பழனிசாமி உள்ளிட்ட கும்பல் சரமாரியாக தாக்கினர். அப்போது வலி தாங்க முடியாமல் கதறிய பாலசுப்பிரமணி, என்னை மன்னித்து விட்டு விடுங்கள் என்று கூறினார். ஆனால் அதனை பொருட்படுத்தாது ஆத்திரம் தீர அடித்தனர். இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணி, மயக்க நிலைக்கு சென்றார்.

இதற்கிடையே பாலசுப்பிரமணிக்கு என்ன ஆனதோ? என பதறிய படி, இளஞ்சியம் மற்றும் நந்தினி ஆகியோர் அங்குள்ள ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். பாலசுப்பிரமணியை தாக்கியவர்கள் மிரட்டியதன் காரணமாக, இளஞ்சியமும், நந்தினியும் விடிய, விடிய கோவிலிலேயே இருந்தனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியை கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு, தாக்கியவர்கள் சென்று விட்டனர். பலத்த தாக்குதலில் பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

நேற்று அதிகாலை இளஞ்சியம் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் பாலசுப்பிரமணி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் தனது மகனை மடியில் தூக்கி வைத்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்யும் வகையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள், உறவினர்கள் பலர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தகவல் அறிந்து கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, வெள்ளியணை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது ஜாபர் உள்ளிட்டோர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பாலசுப்பிரமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய அல்லாளிகவுண்டனூரை சேர்ந்த செல்வகுமார் (39), பழனிசாமி, கடவூர் தாலுகா மேலகவுண்டன்பட்டியை சேர்ந்த முனியாண்டி என்கிற முனியப்பன் (25), பொரணி கும்மாயம்பட்டியை சேர்ந்த மணிவேல் (32), மேலகவுண்டனூரை சேர்ந்த மற்றொரு முனியப்பன் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலசுப்பிரமணி திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருந்தாலும் கூட அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கலாமே, அதைவிடுத்து நீங்கள் தாக்கியது முறையல்ல என்று கூறி விசாரணையின் போது செல்வகுமார் உள்ளிட்டோரை போலீசார் கண்டித்தனர். இந்த கோர சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story