திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்கும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்றும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் டெபாசிட் இழக்கும் என்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
மதுரை,
திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 95–வது வார்டு பகுதியில் மன்னர் கல்லூரி அருகில் உள்ள ராயப்பன் நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதனை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:–
திருப்பரங்குன்றம் தொகுதியில் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி திருப்பரங்ககுன்றம் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த 95–வது வார்டில் உள்ள ராயப்பன் நகரில் ஏறத்தாழ 400–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக மக்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர், அதன்படி ரூ.40 லட்சம் செலவில் 6 ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் அரசாக இந்த அரசு உள்ளது. அதனால் வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்கும். இவ்வாறு அவர் பேசினார்.