இடிதாங்கியில் இருந்து “ரேடியம்” திருட முயன்ற 3 பேர் கைது


இடிதாங்கியில் இருந்து “ரேடியம்” திருட முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2018 3:45 AM IST (Updated: 24 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே இடிதாங்கியில் இருந்து “ரேடியம்” திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பண்டுதக்குடி அன்வரியா தெருவை சேர்ந்தவர் காளிச்சரன் (வயது31). விவசாயி. சம்பவத்தன்று நள்ளிரவு இவருடைய வீட்டை 3 பேர் நோட்டமிட்டு கொண்டிருந்தனர். இதை வீட்டுக்குள் இருந்து கவனித்த காளிச்சரன், வெளியே வந்து பார்த்தபோது 3 பேரும் காளிச்சரனிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் காளிச்சரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கூத்தாநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் கூத்தாநல்லூர் அருகே கோரையாறு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வலங்கைமான் வாடாமங்கலத்தை சேர்ந்த ரவி (46), கல்விக்குடியை சேர்ந்த மணிகண்டன் (23), மாணிக்கமங்கலத்தை சேர்ந்த மற்றொரு ரவி (44) ஆகியோர் என்பதும், இவர்கள் பண்டுதக்குடி அன்வரியா தெருவில் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த இடிதாங்கியின் “ரேடியத்தை” (ஒரு வகை தனிமம்) திருட முயன்றபோது, காளிச்சரன் பார்த்து விட்டதால் அவரை கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story