விசைத்தறி பெண் அதிபருக்கு மிரட்டல்: போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது


விசைத்தறி பெண் அதிபருக்கு மிரட்டல்: போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2018 4:30 AM IST (Updated: 24 Sept 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே விசைத்தறி பெண் அதிபரை மிரட்டிய போலி சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரேமா (வயது 42). விசைத்தறி அதிபர்.

தேவனாங்குறிச்சி அருகே உள்ள கீழேரிப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (45). பிரேமாவுக்கும், விக்னேசுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது. பிரேமா, விக்னேசுக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது.

விக்னேசின் நண்பர் கோம்பை நகர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் (45). இவர் நேற்று பிரேமாவை சந்தித்து பேசினார். அப்போது தன்னை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் ரத்தினம், பிரேமாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. விக்னேசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது ரத்தினம் மீது பிரேமாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் திருச்செங்கோடு ரூரல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது ரத்தினம், போலி சப்-இன்ஸ்பெக்டர் என்று தெரியவந்தது.

இதையடுத்து ரத்தினத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருச்செங்கோடு சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் திருச்செங்கோடு அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story