தஞ்சையில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து வெளிநாட்டினர் உடமைகளுடன் வெளியேறினர்


தஞ்சையில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து வெளிநாட்டினர் உடமைகளுடன் வெளியேறினர்
x
தினத்தந்தி 24 Sept 2018 4:45 AM IST (Updated: 24 Sept 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டதால் வெளிநாட்டினர் உடமைகளுடன் வெளியேறினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நட்சத்திர ஓட்டல் உள்ளது. 3 தளங்களை கொண்ட இந்த ஓட்டலில் 45 அறைகள் உள்ளன. 3-வது தளத்தில் உள்ள 303-ம் நம்பர் அறையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிறிஸ்ட்ராகுல் உள்ளிட்ட 3 பேர் தங்கியிருந்தனர். நேற்றுமாலை திடீரென இந்த அறையில் இருந்து ஏ.சி.யில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்தவுடன் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேரும் தங்களது உடமைகளை எடுத்து கொண்டு தரைதளத்தில் உள்ள வரவேற்பு அறைக்கு ஓடி வந்தனர்.

அங்கிருந்த பணியாளர்களிடம் அறையில் தீப்பிடித்துள்ளதாக தெரிவித்தனர். உடனே பணியாளர்கள் தீயை அணைப்பதற்காக 3-வது தளத்துக்கு விரைந்து சென்று அறைக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அறை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டதால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ மள, மளவென பரவி 304-வது அறைக்கும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தின்போது, ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வேறு ஓட்டலில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது தீயணைப்பு வீரர் செல்வத்துக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வினோத், முருகானந்தம் ஆகியோருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு உடனே 108 ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்து குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story