இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 890 பணியிடங்கள்


இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 890 பணியிடங்கள்
x
தினத்தந்தி 24 Sept 2018 10:15 AM IST (Updated: 24 Sept 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

இ.எஸ்.ஐ. மருத்துவமனை - கல்லூரிகளில் 890 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-

தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு கழக நிறுவனம் சுருக்கமாக இ.எஸ்.ஐ.சி. எனப்படுகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தின் மருத்துவமனைகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுகிறது. தற்போது இந்த மருத்துவமனைகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

புதுடெல்லியில் 539 பணிகள்

புதுடெல்லியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரி, மேலாளர் பணியிடங்களுக்கு 539 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 294 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 141 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 82 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 22 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் வி்ண்ணப்பிக்கலாம். வணிகவியல், சட்டம் மற்றும் மேனேஜ்மென்ட் சார்ந்த பிரிவில் பட்டப்படிப்பு படித்திருந்தால் சிறப்புத்தகுதியாக கருதப்படும்.

விண்ணப்பதாரர்கள் 5-10-2018-ந் தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 5-10-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

ஸ்டாப் நர்ஸ் பணி

இதேபோல கர்நாடக மாநிலம் கலபர்கியில் செயல்படும் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் மற்றும் துணை மருத்துவ பணிகள், மருத்துவம் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஸ்டாப் நர்ஸ் பணிகளுக்கு 100 பேர் உள்பட மொத்தம் 269 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டயட்டீசியன், பார்மசிஸ்ட், மெடிக்கல் சோசியல் ஒர்க்கர், ஸ்பீச் தெரபிஸ்ட், பிளட் பேங்க் டெக்னீசியன், லேப் அசிஸ்டன்ட், லேப் டெக்னீசியன், டாகுமென்டிஸ்ட், போட்டோகிராபர், நூலகர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணியிடங்கள் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. 3-10-2018-ந் தேதி முதல் 11-10-2018-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.

பேராசிரியர் பணிகள்

இதேபோல ஐதராபாத்தில் உள்ள இ.எஸ்.ஐ. கல்லூரியில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 82 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 37-64 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிக்கான கல்வித்தகுதியை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். போதிய பணி அனுபவம் அவசியம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு 25-9-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 28-9-18 முதல் 25-10-18 வரை நேர்காணல் நடக்கிறது.

இவை பற்றிய விவரங்களை www.esic.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இன்னும் பல்வேறு இ.எஸ்.ஐ. கல்லூரி மருத்துவமனைகளில் குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் உள்ளன. அவை பற்றிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story