சிவகாசி அருகே தனியார் மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது; கிராம பெண்கள் கலெக்டரிடம் மனு


சிவகாசி அருகே தனியார் மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது; கிராம பெண்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 25 Sept 2018 4:30 AM IST (Updated: 24 Sept 2018 8:45 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே மாரனேரி–ஊரார்பட்டி நெடுஞ்சாலையில் தனியார் மதுக்கடையை திறக்க அனுமதி வழங்ககூடாது என வலியுறுத்தி கிராம பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர்,

 சிவகாசி அருகே உள்ள மாரனேரி, துரைச்சாமிபுரம், ஆனையூர், உள்ளிட்ட கிராமபெண்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

மாரனேரியில் இருந்து ஊரார்பட்டிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் தனியார் மதுக்கடை இருந்தது. இந்த மதுக்கடை நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது. இந்த மதுக்கடைக்கு அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியும் சிவன் ஆலயமும் திருக்குளமும் உள்ளன. அரசு பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் படித்துவருகின்றனர். இவர்கள் அந்த மதுக்கடை வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது.

தற்போது மீண்டும் அந்த மதுக்கடையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த மதுக்கடை திறக்கப்பட்டால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவ–மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும். கிராம மக்களும் பாதிக்கப்படுவர். இந்த மதுக்கடை அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது.

எனவே மீண்டும் இந்த மதுக்கடையை திறப்பதற்கு அனுமதி வழங்க கூடாது. நிரந்தரமாக இந்த மதுக்கடையை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மனி என்ற மைதீன் அப்துல் காதர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

ராஜபாளையம் மதுரை ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனால் பெட்ரோல் பங்க் உள்ள பகுதியில் அசம்பாவிதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த கடைக்கு அருகில் பள்ளிவாசலும் 60 அடி ரோட்டில் சிவன் கோவிலும் உள்ளது. எனவே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.–


Next Story