அவினாசிபாளையத்தில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பொங்கலூர் அருகே அவினாசிபாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்டது பி.ஆண்டிபாளையம். இங்கு சுமார் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரிவர வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 1000 லிட்டர் குடிநீர் ரூ.380 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். குடிநீர் பற்றாக்குறை குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணியளவில் அவினாசிபாளையம, சுங்கம் நால்ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை–திருச்சி மற்றும் திருப்பூர்–தாராபுரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அவினாசிபாளையம் போலீசார் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் தரப்பில் ஒன்றிய அதிகாரிகள் வந்து ஆழ்குழாய் கிணற்றை ஆழப்படுத்துவதுடன், மின் மோட்டாரை உடனடியாக பொருத்தி தரவேண்டும் என்று கூறி சாலை மறியலை கைவிட மறுத்தனர். இதுகுறித்து பொங்கலூர் ஒன்றிய ஆணையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆணையாளர் ஜீவானந்தம், வட்டார வளர்ச்சி அதிகாரி (ஊராட்சி) ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆழ்குழாயை கிணற்றை ஆழப்படுத்தி, அதில் புதிதாக மின்மோட்டார் பொருத்தி தருவதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் உறுதியளித்தபடி ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறு ஆழப்படுத்தும் பணியும், மின் மோட்டார் பொருத்தும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது.