அ.ம.மு.க. உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு போலீசாருடன், செந்தில்பாலாஜி வாக்குவாதம்- பரபரப்பு


அ.ம.மு.க. உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு போலீசாருடன், செந்தில்பாலாஜி வாக்குவாதம்- பரபரப்பு
x
தினத்தந்தி 24 Sep 2018 11:00 PM GMT (Updated: 24 Sep 2018 7:41 PM GMT)

கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு அளித்திருப்பதை சுட்டிக்காட்டி, க.பரமத்தியில் அ.ம.மு.க. உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

க.பரமத்தி,

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கரூர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் (பதவி பறிப்புக்கு முன்பு) தனது தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் முன் வைத்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், அதனை பொதுமக்கள் நலன் கருதி உடனே நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் செப்டம்பர் 25-ந்தேதி (இன்று) க.பரமத்தி கடைவீதியிலும், 27-ந்தேதி வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவிலும், அக்டோபர் 4-ந்தேதி அரவக்குறிச்சியிலும் அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக செந்தில்பாலாஜி அறிவித்து இருந்தார்.

பின்னர் மாவட்ட காவல் துறையிடமும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரினார். ஆனால் போலீசார் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, செந்தில்பாலாஜி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, போராட்டம் நடத்த அனுமதி பெற்றார்.

இதையடுத்து நேற்று காலை க.பரமத்தி கடைவீதியில் உண்ணாவிரத போராட்டத்திற்காக பந்தல் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடங்கின. இதையறிந்த க.பரமத்தி போலீசார் அங்கு சென்று, அனுமதி விவகாரத்தில் காவல்துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பந்தல் அமைக்கக்கூடாது என்று, கூறினர்.

இதையடுத்து மாலையில் செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் க.பரமத்தி கடைவீதிக்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா ஆகியோரிடம், நீதிமன்றத்தில் அனுமதி பெற்றும் போராட்ட பந்தல் அமைக்க நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? என்று செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார். அதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக போலீஸ் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து நீதிமன்ற எண் பெற்றுள்ளோம் என்று கூறினார். அதற்கு எழுத்து பூர்வமாக அதனை தாருங்கள் என்று கூறி, போலீசாருடன் செந்தில்பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சிறிது நேரத்தில் போலீஸ் தரப்பில் மேல்முறையீடு செய்து கோர்ட்டு வழங்கிய எண்ணை குறிப்பிட்டு அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் கையெழுத்திட்டிருந்த நகல் செந்தில்பாலாஜியிடம் வழங்கப் பட்டது. அதில், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதன் அடிப்படையில் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆகவே போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து பந்தல் அமைக்கும் பணிகளை அ.ம.மு.க.வினர் நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம், செந்தில்பாலாஜி கூறுகையில், ஐகோர்ட்டு அனுமதி அளித்த நிலையில் போலீசார் மேல்முறையீடு மூலமாக எந்த தடை ஆணையும் பெறவில்லை. மேல்முறையீடு மனு தாக்கல் செய்ததை வைத்து கொண்டு போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். இது கோர்ட்டு அவமதிப்பாகும். ஒருதலை பட்சமாக முடிவு எடுத்துள்ள போலீசார் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப் படும். இதே இடத்தில் கோர்ட்டு அனுமதி பெற்று மக்களுக்கான போராட்டத்தை நடத்தியே தீருவேன். டி.டி.வி.தினகரன் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் ஆளும் அ.தி.மு.க.வினர், எங்கள் கட்சியின் பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு தடைவிதிக்கிறார்கள்.

காவல்துறையானது ஆளும் கட்சியின் ஏவல்துறையாக உள்ளது. மத்திய பா.ஜ.க.வின் உத்தரவினை எடப்பாடி பழனிசாமி அரசு நிறைவேற்றுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். டி.டி.வி. தினகரன் தலைமையில் நாங்கள் சட்ட மன்றத்திற்கு செல்வோம். அப்போது எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் தடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Next Story