போலீஸ் நிலையம் முன்பு சாலையில் படுத்து தே.மு.தி.க.வினர் திடீர் மறியல்


போலீஸ் நிலையம் முன்பு சாலையில் படுத்து தே.மு.தி.க.வினர் திடீர் மறியல்
x
தினத்தந்தி 24 Sep 2018 10:45 PM GMT (Updated: 24 Sep 2018 7:43 PM GMT)

குளித்தலை போலீஸ் நிலையம் முன்பு சாலையில் படுத்து தே.மு.தி.க.வினர் திடீர் மறியல் போக்குவரத்து பாதிப்பு.

குளித்தலை,

குளித்தலை போலீஸ் நிலையம் முன்பு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் தங்கவேல், குளித்தலை நகர செயலாளர் அருள்மொழிதேவன், நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் கரூர் - திருச்சி சாலையில் படுத்து நேற்று இரவு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது குறித்து தே.மு.தி.க.வினர் கூறுகையில், குளித்தலை அருகே உள்ள செம்மேட்டுபட்டியை சேர்ந்தவர் நல்லுசாமி மகன் ராமச்சந்திரன்(வயது 32). தே.மு.தி.க நிர்வாகியான இவர் கடந்த 9 -ந் தேதி தனது வீட்டின் பின்புறம் இருந்தபோது, வலையப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர், ராமச்சந்திரன் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறக்க முயன்றார். சத்தம் கேட்டு வந்த ராமச்சந்திரன் அவரை பிடிக்க முயன்றபோது, அவரை கடித்துவிட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ராமச்சந்திரன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்தனர். பல நாட்கள் ஆகியும் இது குறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினார்கள். தே.மு.தி.க.வினர் திடீரென சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் கரூர்-திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story