அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் கடத்தியதாக கூறப்பட்ட இளம்பெண், கோர்ட்டில் ஆஜர்


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் கடத்தியதாக கூறப்பட்ட இளம்பெண், கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 25 Sept 2018 4:30 AM IST (Updated: 25 Sept 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் கடத்தியதாக கூறப்பட்ட இளம்பெண் தஞ்சை கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவர், என்னை யாரும் கடத்தவில்லை என கூறினார்.

தஞ்சாவூர்,

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் விஜய ராஜேஷ்குமார். இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி யாழினி(வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். யாழினி, சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயராஜேஷ்குமார் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தனது மனைவி யாழினி, தஞ்சை பர்மா காலனி அண்ணா நகரில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தபோது, நாகையை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரத்தீஷ் கடத்தி சென்று விட்டதாக கூறி இருந்தார்.

புகாரின் பேரில் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார், ரத்தீஷ் மற்றும் அவருடைய நண்பர் சுனில் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். யாழினி படிக்கும் அதே சட்டக்கல்லூரியில் ரத்தீசும், சுனிலும், மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடத்தியதாக கூறப்பட்ட யாழினி நேற்று காலை தஞ்சை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு விஜயஅழகிரி முன்னிலையில் ஆஜரானார். இந்த வழக்கை மாலைக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி மாலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது யாழினியின் கணவர், மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளது தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட்டு, மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதால் அங்கு ஆஜராகுமாறு யாழினிக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக கோர்ட்டில் இருந்து வெளியே வந்த யாழினி, நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரத்தீஷ் என்பவர் என்னை கடத்தி சென்று விட்டதாக எனது கணவர் விஜயராஜேஷ்குமார் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அது பொய்யான புகார். என்னை யாரும் கடத்தவில்லை. நான் எப்போதும் போல் சென்னையில் இருந்து கல்லூரிக்கு சென்று வருகிறேன். தேவைப்பட்டால் கல்லூரிக்கு தினமும் சென்று வந்த வருகை பதிவேட்டை பார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story