சிவகங்கையில் தீப்பற்றி எரிந்த வேனில் சிக்கித்தவித்த ஆசிரியர்; போலீஸ்காரர் துரிதமாக செயல்பட்டு மீட்டார்
ஓடும் வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கிய ஆசிரியரை போலீஸ்காரர் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). இவர் நுத்தன்கண்மாய் என்ற ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர் தனது சொந்த வேனை மதுரையில் சர்வீஸ் செய்வதற்காக நேற்ற மாலை ஓட்டிச் சென்றார். சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் உள்ள சிக்னல் அருகே திரும்பும் போது வேனின் கீழ்ப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. அங்கிருந்த போலீஸ்காரர் கண்ணன் மற்றும் போக்குவரத்த போலீசார் வேனை நிறுத்தி செல்வராஜை இறங்கும்படி தெரிவித்தனர்.
போலீசார் உஷார் படுத்தியதும் செல்வராஜ் வேனில் இருந்து வெளியேற முயற்சித்தார். ஆனால் சீட் பெல்டை அவிழ்த்து விட்டு உடனடியாக வெளியேற அவரால் இயலவில்லை. தீ மளமள வென பரவி வந்த நிலையில், போலீசார் துரிதமாக செயல்பட்டு சீல் பெல்டை அவிழ்க்க உதவி செய்து வேனில் சிக்கித்தவித்த செல்வராஜை பத்திரமாக மீட்டனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் வேன் எரிந்து நாசமாகி விட்டது. இந்த சம்பவத்தில் அந்தப்பகுதியில் இருந்த போலீஸ் நிழற்குடையின் ஒரு பகுதி எரிந்தது. இத்துடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் சேதம் அடைந்தது. மின்துறையினர் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.
இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேனில் தவித்த ஆசிரியர் செல்வராஜை சமயோஜிதமாக காப்பாற்றிய போலீஸ்காரர் கண்ணனை பொதுமக்கள் பாராட்டினர்.