சம்பள கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றக்கோரி தபால்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்
தபால்துறை ஊழியர்களுக்கான சம்பள கமிஷன் பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி மதுரையில் தபால் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
தபால்துறை ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா சம்பள கமிஷன் அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தபால்துறை ஊழியர்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மத்திய அரசு, தபால்துறை ஊழியர்களுக்கான சம்பள கமிஷன் பரிந்துரையில் ஊழியர்களுக்கு விரோதமான பரிந்துரைகளை மட்டும் அமல்படுத்த முன்வந்துள்ளது. எனவே சம்பள கமிஷன் பரிந்துரையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தபால் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மதுரை தலைமை தபால் நிலையம் மற்றும் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது, சம்பள கமிஷன் பரிந்துரைகளை 2016–ம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும். அத்துடன் அதே ஆண்டில் இருந்த சம்பள நிர்ணயத்தை கணக்கிட்டு இன்று வரையிலான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெறுபவர்களுக்கான பணிக்கொடை பரிந்துரை ரூ.5 லட்சத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக வழங்க வேண்டும். சம்பள கமிஷன் பரிந்துரைத்த தொழிலாளர் வைப்புநிதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வருடாந்திர விடுமுறையை 30 நாட்களாக வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுப்பை 180 நாளாக கணக்கிட்டு பணமாக கொடுக்க வேண்டும். விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு ஆணையை வழங்க வேண்டும். மருத்துவ வசதிகள் மற்றும், இ.எஸ்.ஐ. மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும், தவறு செய்யும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகிற 4–ந் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால்நிலையம் முன்பும், வருகிற 10–ந் தேதி டெல்லியில் உள்ள தபால்துறை தலைமை அலுவலகம் முன்பும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் அகில இந்திய தபால் ஊழியர் சங்கத்தின் கன்வீனர் காமராஜ், கோட்ட செயலாளர்கள் ராஜமோகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.