வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குஜிலியம்பாறை அருகே அரசுக்கு சொந்தமான குளத்தின் புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை கிராமம் சின்னழகுநாயக்கனூர் குளத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பொதுமக்கள் அதனை ரத்து செய்ய கோரியும், குளத்தில் மரங்கள் வெட்டுவதை தடுத்து நிறுத்த கோரியும், நேற்று குஜிலியம்பாறையில் உள்ள பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் பொதுமக்கள் சார்பில் புகார் மனு ஒன்றை பாளையம் வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்க சென்றனர். ஆனால் அலுவலகத்தில் அவர் இல்லை. எனவே அலுவலகத்தில் இருந்த கோட்டாநத்தம் வருவாய் ஆய்வாளர் மைதிலியிடம் புகார் மனுவை கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆர்.கோம்பை கிராமம், சின்னழகுநாயக்கனூர் மேட்டுமடைக்குளத்தில் வேப்பமரம், கருவேல மரம் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான மரங்கள் உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் நான்கு முறை இக்குளம் தூர்வாரப்பட்டுள்ளது. தற்போது அக்குளத்தில் உள்ள மரங்களை தனிநபர் சிலர் வெட்ட வந்தனர். அப்போது பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அதை தடுத்து நிறுத்திவிட்டோம். அரசுக்கு சொந்தமான குளத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை தற்போது தனியார் ஒருவர் பட்டா மாறுதல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இயற்கை வளங்களை வெட்டாமல் பாதுகாக்கவும், அரசு குளத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தின் பட்டா மாறுதலை ரத்து செய்யவும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு குறித்து வேடசந்தூர் தாசில்தார் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் ஆய்வாளர் மைதிலி உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story