புகையிலை பொருட்களை வீடுகளில் பதுக்கினால் கடும் நடவடிக்கை கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை


புகையிலை பொருட்களை வீடுகளில் பதுக்கினால் கடும் நடவடிக்கை கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Sept 2018 3:45 AM IST (Updated: 26 Sept 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீடுகளில் பதுக்கி வைத்து விற்றால், அதன் உரிமையாளர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர்,

தமிழ்நாட்டில் குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது, வாகனங்களில் கொண்டு செல்வது, வினியோகிப்பது மற்றும் சில்லரை விற்பனை செய்வது குற்றமாகும். அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட உணவு வணிகரின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும். இதன் மூலம் உணவு வணிகர்கள் தமது தொழிலை தொடர்ந்து நடத்த இயலாமல் போகும்.

சில இடங்களில் உணவு வணிகர்கள் தவிர செல்போன் கடைகள், காலணி விற்பனையகம், பேன்சி ஸ்டோர் மற்றும் ஹார்டுவேர் போன்ற உணவு வணிகர்கள் அல்லாதோர் கடைகளில் இந்த பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலும் அவர்களது தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும். சிலர் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் பெறப்படுகிறது.

இனிவரும் காலங்களில் எந்த ஒரு குடியிருப்பு பகுதியிலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அந்த வீடு மூடப்பட்டு “சீல்” வைக்கப்படும். இது தவிர அந்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் மேற்கண்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை மற்றும் உணவு பொருள் தொடர்பான அனைத்து புகார்களையும், உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story