அ.தி.மு.க. ஆட்சி குறித்து தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுப்பேன் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
அ.தி.மு.க. ஆட்சி குறித்து தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என்று தஞ்சையில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான துரைக்கண்ணு பேசியதாவது:–
ஊழலை கண்டு பிடித்தவர்கள் தி.மு.க.வினர் தான். மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் ஊழல், விவசாயத்திற்காக பூச்சி மருந்து வழங்கியதில் ஊழல், மின்சாரம், நிலக்கரி பேரத்தில் ஊழல் என அனைத்திலும் ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர். லஞ்சத்தில் திளைத்தவர்கள் தி.மு.க.வினர். இதனை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது.
வேளாண்மைத்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்திலும் வளர்ச்சி. வறட்சியிலும் வளர்ச்சி கண்டு வருகிறது தமிழக அரசு. இந்த ஆட்சி இன்றைக்கு கவிழ்ந்து விடும், நாளைக்கு கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் சிலர் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., தஞ்சை மண்ணின் மைந்தன் வைத்திலிங்கம் இருக்கும் வரை இந்த ஆட்சியை, கட்சியை எவராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.