நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது, காங்கிரஸ் அக்டோபர் 2-ந் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அக்டோபர் 2-ந் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அக்டோபர் 2-ந் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
தேர்தல் பிரசாரம் தொடக்கம்
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இதில் மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி காந்தி ஜெயந்தி அன்று நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறது.
அக்டோபர் 2-ந் தேதி தொடங்கும் தேர்தல் பிரசாரம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாளான நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தில் உள்ள 60 ஆயிரம் நாடாளுமன்ற, சட்டமன்ற வாக்குச்சாவடிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளனர்.
மக்களிடம் முறையிடுவோம்
இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறியதாவது:- இந்த பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பொருளாதார ரீதியாகவும், உழைப்பையும் தருமாறு பொது மக்களிடம் முறையிடுவோம். மேலும் தொண்டர்கள் பா.ஜனதா அரசு செய்ய தவறிய வாக்குறுதிகள் அடங்கிய பதாகையுடன் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். எங்களின் தேர்தல் வாக்குறுதிகளையும் பொது மக்களிடம் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளை போராட்டம்
இதேபோல ரபேல் போர் விமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வலியுறுத்தி மும்பையில் நாளை (வியாழக்கிழமை) காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story