வயநாட்டில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் வெடிபொருட்களை வைத்த மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகளை ஒட்டி சென்றதால் பரபரப்பு
வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் மாவோயிஸ்டுகள் வெடிபொருட்களை வைத்தனர். நுழைவு வாயில் முன்பு சுவரொட்டிகளை ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் அட்டப்பாடி, அகழி, முக்காலி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளது. வனப்பகுதியில் மறைந்து இருக்கும் மாவோயிஸ்டுகள் போலீசார் மீது அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள். இதையடுத்து, மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் தண்டர்போல்டு அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தமிழக–கேரள எல்லையில் இருமாநில போலீசாரும் இணைந்து ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் மாவோயிஸ்டுகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
வயநாடு அருகே உள்ள பூக்காடுனங்கு பகுதியில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர். அவர்கள் பல்கலைக்கழகத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் புகுந்தனர். அங்கிருந்த காவலாளியை மிரட்டி நுழைவு வாயில் அருகே சுவரொட்டிகளை ஒட்டினார்கள். சுவரொட்டியில் மாவோயிஸ்டுகளின் 14–ம் ஆண்டு பிறந்த நாள் 21–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை கொண்டாடப்படும் என எழுதப்பட்டு உள்ளது.
பின்னர் வெளியே செல்ல காவலாளியிடம் வழி கேட்டனர். இதற்கிடையே அந்த வழியாக 3 மாணவர்கள் வந்தனர். அவர்களிடம் வழிகேட்டு விட்டு மாவோயிஸ்டுகள் காட்டுக்குள் புகுந்து விட்டனர். மாவோயிஸ்டுகள் அங்கிருந்து செல்லும் போது கல்லூரி வளாகத்தில் வெடிபொருட்களை வைத்து விட்டு சென்று விட்டனர். இதனை பார்த்த காவலாளி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வயநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
மாவோயிஸ்டுகள் வைத்து சென்ற வெடிபொருட்களை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அவை வெடிபொருட்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் மாவோயிஸ்டுகள் வெடிபொருட்களை வைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.