ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்ய கோரி கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்ய கோரி கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 26 Sept 2018 8:42 PM IST)
t-max-icont-min-icon

ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்ய கோரி தஞ்சையில் கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சிபிசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கணக்கர் சங்க மாநில தலைவர் ராஜராஜன் வரவேற்றார். இதில் கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பிரகாஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கருவூல பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மேலாண்மை திட்டம் மூலம் கருவூலத்துறையில் ஆட்குறைப்பு அரசாணை எண்: 56–யை அமல்படுத்த துடிக்கும் தமிழகஅரசை கண்டித்தும், இந்த அரசாணையை உடனே ரத்து செய்ய கோரியும், கருவூல ஊழியர்கள் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசாணை: 286–யை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். முடிவில் கணக்கர் சங்க மாநில பொருளாளர் சுரேந்தர் நன்றி கூறினார்.

Next Story