காசோலை மோசடி வழக்கில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு ஒரு ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு
காசோலை மோசடி வழக்கில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிழக்கு மந்திக்கோன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மனைவி நாடியம்மாள்(வயது 34).பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் மகன் மைதீன்கனி(40). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் நாடியம்மாளுக்கு வீடு கட்டிடத்தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதில் பாக்கித் தொகை ரூ.5 லட்சம் திரும்பக் கொடுக்க வேண்டியிருந்தது. இதற்காக மைதீன்கனி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை நாடியம்மாளிடம் கொடுத்தார்.
இந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாததால் வங்கியில் இருந்து காசோலை திரும்பி வந்தது.
இது குறித்து நாடியம்மாள் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டில் முகமதுகனி மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி முகமது கனிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தையும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.