கலெக்டர் தலைமையில் வழிகாட்டுதல் குழு ஆலோசனை கூட்டத்தில் முதன்மை செயலாளர் பேச்சு


கலெக்டர் தலைமையில் வழிகாட்டுதல் குழு ஆலோசனை கூட்டத்தில் முதன்மை செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 27 Sep 2018 11:00 PM GMT (Updated: 27 Sep 2018 6:56 PM GMT)

கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் அமுதா கூறினார்.

கோவை,

உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளரும், அரசு முதன்மை செயலாளருமான அமுதா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள், மளிகைக்கடை உரிமையாளர்கள், உணவு வணிக சங்கங்கள், குடிநீர் பாட்டில் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், நடைபாதை கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளரும், முதன்மை செயலாளருமான அமுதா கூறியதாவது:-

தமிழகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், இயற்கை சமநிலை பாதுகாக்கும் நோக்கிலும், தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முற்றிலும் தடை செய்யப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை பயன்படுத்தி உணவு வணிகத்தை சிறப்பாக செய்து இயற்கை வளத்தை காக்க வேண்டும்.

உணவு பொருட்கள் பொட்டலமிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் டம்ளர், பாக்கெட் குடிநீர், தேநீர் கரண்டி, தெர்மாகோல் பொருட்கள் அனைத்தும், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், மேசையின் மீது பிளாஸ்டிக் விரிப்பான், உணவு பொருள் மீது போர்த்தப்பட்ட பிளாஸ்டிக் தாள்கள், பைகள், கையுறை, தலைகவசம், டீ, குளிர்பானங்கள், பார்சல், செய்யப்படும் பிளாஸ்டிக் போன்றவை தடை செய்யப்பட உள்ள பிளாஸ்டிக்குகள் ஆகும்.

மேலும், இந்த பொருட்களுக்கு மாற்று பொருட்களான வாழை இலை, துணி பைகள், பாக்கு மட்டைகள், சில்வர் டம்ளர், கண்ணாடி டம்ளர், மண்குவளைகள், பீங்கான டம்ளர், எவர்சில்வர் கரண்டி, எவர்சில்வர் டப்பா, காகித பொருட்கள், பாக்கு தட்டு, காகித விரிப்பான், எவர்சில்வர் பாத்திர மூடிகள், காகித பைகள், சணல் பைகள், துணிக்கவசம், தூக்கு வாளி மற்றும் எவர் சில்வர் பொருட்கள், பீங்கான் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்போது சேர்க்கப்படும் பிஸ்பீனால்-ஏ என்ற வேதிப்பொருளால் பிளாஸ்டிக் குவளையில் சூடாக தேநீர் குடிக்கும்போது பிளாஸ்டிக் வேதிவினை புரிந்து நம் உடலில் பல நோய்களுக்கு காரணமாகிறது. மனித மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கிறது. மார்பக புற்றுநோய் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல், ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுத்துவதோடு கேன்சர் போன்ற வியாதியை உருவாக்கும் தன்மையையும் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாக பாதிக்கிறது. பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதை தவிர்த்தல் என்பது நீர் நிலைகள், சுற்றுபுறச் சூழல், மண்வளம் மற்றும் விலங்கினங்கள் போன்றவற்றின் சுகாதாரம் காக்கப்படுவதற்கு நாம் ஆற்றும் சேவையாகும்.

எனவே, பொதுமக்கள், உணவு வணிக சங்கங்களும், முற்றிலுமாக பிளாஸ்டிக் உபயோகப்படுத்துதலை தவிர்த்து அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து சுகாதாரமாக வாழ்ந்திடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story