பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2018 3:45 AM IST (Updated: 28 Sept 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் விளக்கி பேசி, அதனை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் தீபகுமாரி, அரசு ஊழியர் மாவட்ட தலைவர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க நீலகிரி மாவட்ட செயலாளர் பிரபாவதி கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் 200 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்டம் முழுவதும் மக்களின் சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதுடன், மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தும் சுகாதார திட்டங்களை உடனுக்குடன் கிராமப்புற மக்களுக்கு தெரியும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு சுகாதாரத் துறையில் முதலிடம் பெற அல்லும், பகலும் உழைத்த கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பணியின் போது 35 வகையான பதிவேடுகளை பராமரிப்பதில் சிரமம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. அரசு திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றவும், மக்கள் சேவைகள் மக்களை சென்றடையும் கிராம சுகாதார செவிலியர்களை மாற்று பணிக்கு அமர்த்துவதால் பணி தேக்கம் அடைகிறது.

பதிவேடுகள் பராமரிப்பதை குறைத்து சுருக்கமான பக்கங்களோடு அரசே வழங்க வேண்டும். 1.6.1999 முதல் பணியில் சேர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு இலவச குடியிருப்புகள் வழங்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (நேற்று) மாநிலம் தழுவிய மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கோரிக்கைகள் குறித்த மனு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

Next Story