விவசாயிகளை அச்சுறுத்திய காட்டுயானை என்ன ஆனது?


விவசாயிகளை அச்சுறுத்திய காட்டுயானை என்ன ஆனது?
x
தினத்தந்தி 28 Sept 2018 3:30 AM IST (Updated: 28 Sept 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

தேவாரம் பகுதியில் விவசாயிகளை அச்சுறுத்திய காட்டுயானை என்ன ஆனது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தேனி,

தேவாரம் வனப்பகுதியில் காட்டுயானை உலா வருகிறது. சுமார் 5 ஆண்டுகளாக விவசாயிகளை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து விவசாயிகளை தாக்கி கொல்வதோடு, விளை பயிர்களை நாசம் செய்வதையும் வழக்கமாக கொண்டு இருந்தது. தேவாரம் பகுதியை சேர்ந்த 7 பேர் இந்த யானையிடம் சிக்கி பலியாகி உள்ளனர். முதலில் இது மக்னா யானை என்று சொல்லப்பட்டது. பின்னர் இது பெண் யானை என்று கண்டறியப்பட்டது.

விவசாயிகளை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் இந்த யானையை பிடித்து, இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் 2 கும்கி யானைகளை வரவழைத்து யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒரு மாத காலம் கும்கி யானைகள் தேவாரம் பகுதியில், காட்டுயானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், கும்கி யானைகள் வந்த பிறகு காட்டு யானையை காணவில்லை. அது மீண்டும் விளை நிலங்களுக்கோ, மலையடிவார பகுதிகளுக்கோ வரவில்லை. இதையடுத்து ஒரு மாத கால தேடுதல் பணியை தொடர்ந்து, காட்டுயானை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று இருக்கும் என்று கூறி கடந்த மாதம் கும்கி யானைகள் பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்சிலிப் பகுதிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

காட்டு யானையை கும்கி யானைகள் பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால், கும்கி யானைகள் திரும்பிச் சென்றதால் மீண்டும் விவசாயிகள் மத்தியில் காட்டு யானை குறித்த பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டுக்குள் யார் கண்ணிலும் சிக்காத நிலையில் ஒற்றை காட்டு யானை உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த யானை என்ன ஆனது என்பது மர்மமாக உள்ளது. வனப்பகுதியில் உலா வருகிறதா? அல்லது கேரள மாநில பகுதிகளுக்கு சென்று விட்டதா? என்பது தெரியவில்லை. சமீப காலங்களில் அந்த யானையை நேரில் பார்த்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. வனத்துறை தரப்பிலும் யானை எங்கு இருக்கிறது என்று உறுதியாக கூற முடியவில்லை. இதனால், மீண்டும் யானை வந்து விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் உள்ளனர்.

யானை என்ன ஆனது? என்பது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதமிடம் கேட்ட போது, ‘ஒற்றை காட்டுயானை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று இருக்க வாய்ப்பு உள்ளது. மழைக்காலம் என்பதால் யானைக்கு தேவையான இரை வனப்பகுதிகளில் போதிய அளவில் கிடைக்கிறது. தேவாரம் வனப்பகுதியில் யானைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு வளம் உள்ளது. மூங்கில் மரங்கள் அதிக அளவில் உள்ளன. அவை தற்போது பசுமையாக வளர்ந்துள்ளன. ஒற்றை காட்டுயானை மலையடிவார பகுதிகளுக்குள் இன்னும் வர வில்லை. மலையடிவார பகுதிகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகள் பயப்பட தேவையில்லை’ என்றார். 

Next Story