வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி வடிகால் வசதி செய்து தர கோரிக்கை


வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி வடிகால் வசதி செய்து தர கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2018 4:15 AM IST (Updated: 28 Sept 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

அரியமங்கலம் உக் கடை பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வடிகால் வசதி செய்து தர அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் உக்கடை பகுதியில் உள்ள பவளம் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தண்ணீர் சூழ்ந்தது. மழைக்காலத்தில் அருகில் உள்ள உய்ய கொண்டான் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் இந்த குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சுற்றி நிற்பது வழக்கம்.

ஆனால், தற்போது மழை எதுவும் பெய்யாததாலும், உய்யகொண்டான் வாய்க் காலில் தண்ணீர் அதிகளவு ஓடாததாலும் இந்த தண்ணீர் எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் அப் பகுதி மக்கள் திகைத்தனர்.

தண்ணீரின் அளவு நேற்று மேலும் உயர்ந்ததால் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ என்று அஞ்சிய அப்பகுதி மக்கள் கீழ்த்தளத்தில் இருந்த பொருட்களை எடுத்து உயரமான இடத்தில் வைத்தனர். அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து பொருட்கள் வாங்கக்கூட வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து செல்ல முறையான வடிகால் வசதியும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, வீடுகளை சூழ்ந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் பார்த்தபோது, பொன்மலை பணிமனையில் சுற்றுச்சுவர் இடிந்த ஒரு இடத்தில் இருந்து வெளியேறுவது தெரியவந்தது. அது தண்ணீரா? அல்லது பணிமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரா? என்று தெரியவில்லை.

அந்த தண்ணீர் ரெயில்வே தண்டவாளம் வழியாக திடீர் நகரில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் கலந்து அங்கிருந்து அருகில் உள்ள பவளம்நகரில் புகுந்ததால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story