புதையலில் தங்க சங்கிலி கிடைத்ததாக கூறி பித்தளை நகையை விற்று டீக்கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் மோசடி


புதையலில் தங்க சங்கிலி கிடைத்ததாக கூறி பித்தளை நகையை விற்று டீக்கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 28 Sept 2018 3:45 AM IST (Updated: 28 Sept 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

புதையலில் 1½ கிலோ எடையுள்ள தங்க சங்கிலி கிடைத்ததாக கூறி பித்தளை நகையை விற்று டீக்கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் பெற்று நூதன மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி ஜீவாநகர் நேருதெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 50). இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ந் தேதி இவருடைய கடைக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் சண்முகசுந்தரத்திடம் தாங்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஈரோடு மாவட்டத்தில் கட்டிட பணிக்காக வந்துள்ளதாகவும், அங்கு குழிதோண்டியபோது, 1½ கிலோ எடையுள்ள தங்கச்சங்கிலி புதையலாக கிடைத்ததாகவும், தேவைப்பட்டால் அதனை விலைக்கு வாங்கி கொள்ளும்படியும் கூறி சந்தன மாலை போன்று குண்டு மணிகளுடன் கூடிய சங்கிலியை காட்டினர்.

பின்னர் அவர்கள், சங்கிலியில் இருந்து ஒரு குண்டு மணியை (50 மில்லிகிராம் அளவுள்ள) கழட்டி அவரிடம் கொடுத்து, இது சுத்தமான தங்கமா? என்று பரிசோதித்து கொள்ளுங்கள். சுத்தமான தங்கமாக இருந்தால் வாங்கி கொள்ளுங்கள். நாங்கள் 3 நாட்கள் கழித்து வருகிறோம் என்று கூறி சென்று விட்டனர். இதையடுத்து சண்முகசுந்தரம் அந்த குண்டுமணியை பரிசோதித்தபோது, அவை சுத்தமான தங்கமாக இருந்தது.நேற்று முன்தினம் மாலை அதே நபர்கள், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் மீண்டும் சண்முகசுந்தரத்தின் டீக்கடைக்கு வந்தனர்.

அவரிடம் தங்கத்தை பரிசோதித்தீர்களா? என்று கேட்டனர். அவரும் பரிசோதித்துவிட்டேன் அது தங்கம் தான் என்றார். உடனே அவரிடம், இந்த தங்க சங்கிலியை வைத்து கொண்டு முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுங்கள். அதன் பிறகு சங்கிலியை விற்றுவிட்டு மீதி பணத்தை கொடுங்கள் என்று கேட்டனர். அவரும் ரூ.1 லட்சத்தை அவர்களிடம் கொடுத்து சங்கிலியை பெற்று கொண்டார். பணத்தை வாங்கிய 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

அதன்பிறகு அவர் அந்த சங்கிலியை பரிசோதித்து பார்த்தபோது, அவை பித்தளை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்அடிப்படையில், டீக்கடைக்காரரிடம் நூதன முறையில் மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story