புதுவை கோரிமேட்டில் ரூ.200 கோடி செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
கோரிமேட்டில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் ரூ.200 கோடி செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதலியார்பேட்டையில் ரூ.6 கோடியே 41 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. மண்டல அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கட்டிடத்தை மத்திய மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் திறந்து வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவை கோரிமேட்டில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்று புதுவை அரசு கோரிக்கை விடுத்தது. இதற்கு மாநில அரசு நிலம் ஒதுக்கி கொடுத்தால் இந்த மருத்துவமனையை அமைத்து தருவதாக உறுதி அளித்தோம்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று (நேற்று) என்னை சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கு கோரிமேட்டில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் 5½ ஏக்கர் நிலம் ஒதுக்கி தருவதாக கூறினார். எனவே அங்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படும். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர் கந்தசாமி, அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story